சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர்,
இன்றைய முன்னணி
நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட
தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது
கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார். எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.
ஆதித்தனாரின் தந்தையார் பெயர் சிவந்தி
ஆதித்தர். தாயார் கனகம் அம்மையார். தந்தையார் ஒரு வழக்கறிஞர். மிகவும் வசதியான
குடும்பம் அவர்களுடையது. தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி
ஆதித்தர்,
அவரை இங்கிலாந்துக்கு
அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச்
செய்துள்ளார். பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், செய்திகள் முதலியவற்றை எழுதிப் பணம் சம்பாதித்ததாக அவரே எழுதியுள்ளார். இலண்டனில்இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.
1933
ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர்
சென்னை திரும்பிய அவர்,
பெரியாரின்சுயமரியாதைக்
கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின்
குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது
பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே
வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு
திரும்பினார்.
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942
ஆம் ஆண்டில் இதை அவர்
தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில்,தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த
அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது,தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.
தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித்
தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள்
வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து,
சாதாரண மக்களை
முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப்
பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில்
கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது
இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.
மாதம் ஒரு நாவல்
என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும்
வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார்
வித்திட்டார்.
சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர
மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான
சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.
இவர்
தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார்.
Courtesy: Wikipedia